பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார் - அதிபர் புதின் புகழாரம்
|பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ,
இந்தியா - ரஷியா இடையே ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் இந்தியா - ரஷியா இடையேயான இரு நாட்டு உச்சி மாநாடு மாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி நேற்று ரஷியா சென்றுள்ளார். ரஷிய அதிபரின் பண்ணை வீடான நோவோ கிரையோவாவுக்கு சென்ற பிரதமர் மோடியை அதிபர் புதின் வரவேற்றார். பின்னர், பிரதமர் மோடி 3வது முறையாக தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியமைத்ததற்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார். பின்னர், பண்ணை வீட்டில் புதினுடன் தேநீர் விருந்தில் மோடி பங்கேற்றார்.
அப்போது, பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு சேவை செய்ய தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்தியாவின் பிரதமராக 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களுக்கு என் வாழ்த்துகள். நீங்கள் 3வது முறையாக பிரதமரானது ஒன்றும் எதிர்பாராமல் நடந்ததல்ல. நீங்கள் பல ஆண்டுகளாக செய்த உழைப்பிற்கு கிடைத்த முடிவு. உங்களுக்கென்று தனியே திட்டங்கள் உள்ளன. நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்க நபர், இந்தியாவுக்காகவும், இந்திய மக்களுக்களின் நலனுக்காகவும் இலக்குகளை அடையக்கூடியவர். இந்திய மக்களுக்கு சேவை செய்ய உங்கள் வாழ்நாளை அர்ப்பணித்துள்ளீர்கள்
இவ்வாறு அவர் கூறினார்.