ராணுவத்தில் இருந்து இந்தியர்களை விடுவிக்க ரஷியா முடிவு..?
|பிரதமர் மோடிக்கு நேற்று இரவு, ரஷிய அதிபர் புதின் விருந்து அளித்தார்.
மாஸ்கோ,
பிரதமர் மோடி, ரஷியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். நேற்று அவர் முதலில் ரஷியாவுக்கு புறப்பட்டு சென்றார். பிற்பகலில் ரஷியா போய்ச்சேர்ந்தார். மாஸ்கோ விமான நிலையத்தில் அவரை ரஷியாவின் முதன்மை துணை பிரதமர் டெனிஸ் மன்டுரோவ் வரவேற்றார்.
அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினரும் இந்திய தேசிய கொடியுடன் வந்து மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியா, ரஷியா இடையிலான 22-வது வருடாந்திர உச்சி மாநாடு, இன்று (செவ்வாய்க்கிழமை) மாஸ்கோவில் நடக்கிறது. அதில் பங்கேற்பதற்காகவே பிரதமர் மோடி சென்றுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அவர் அங்கு சென்றுள்ளார். ரஷியா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு அவர் செல்வதும் இதுவே முதல்முறை ஆகும்.
பிரதமர் மோடிக்கு நேற்று இரவு, ரஷிய அதிபர் புதின் விருந்து அளித்தார். இதைத்தொடர்ந்து, இன்றைய உச்சி மாநாட்டில், பிரதமர் மோடியும், புதினும் சந்திக்கிறார்கள். முதலில், இருவரும் தனியாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். பிறகு, பிரதிநிதிகள் குழுக்களுடன் இணைந்து பேசுவார்கள்.
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி அவர்கள் விவாதிக்கிறார்கள். பரஸ்பர நலன்சார்ந்த பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள். ராணுவம், வர்த்தகம், முதலீட்டு உறவு, எரிசக்தி ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம், மக்களிடையிலான உறவு ஆகியவற்றில் இருதரப்பு உறவு குறித்து இருவரும் பேசுகிறார்கள். ரஷியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் பிரதமர் மோடி இன்று சந்திக்கிறார். அதிபரின் கிரெம்ளின் மாளிகையில், போர் வீரர் கல்லறையில் மலர் அஞ்சலி செலுத்துகிறார்.
பிரதமர் மோடிக்கு நேற்று இரவு, ரஷிய அதிபர் புதின் விருந்து அளித்தபோது 3-வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அதிபர் புதினிடம் இந்தியர்கள் ரஷிய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட விவகாரத்தை பிரதமர் மோடி எழுப்பியதை அடுத்து, ரஷிய ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க ரஷியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் உடனடியாக விடுவிக்கவும், அவர்கள் தாயகம் திரும்புவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர ரஷியா ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.