இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்திய லெபனான் - 7 பேர் உயிரிழப்பு
|இஸ்ரேல் மீது சரமாரியாக லெபனான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
பெய்ரூட்,
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் 27-ந்தேதி தாக்குதல் நடத்தி கொன்றது.
இதன்பின் அந்த அமைப்பின் புதிய தலைவராக நயீம் காசிம் பதவியேற்றார். இந்நிலையில், சில நிபந்தனைகளுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தயாராக இருக்கிறோம் என நயீம் காசிம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரிமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி ஒரு ஏவுகணை தாக்குதல் மூலம் ஐந்து பேர் உயிரிழந்தனர் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மற்றொரு ஏவுகணை தாக்கப்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
லெபனானில் இருந்து 25-க்கும் மேற்பட்ட ஏவுகணகைள் இஸ்ரேல் எல்லையை தாக்கின. ஆலிவ் அறுவடை செய்து கொண்டிருந்த மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.வடக்கு இஸ்ரேலில் உள்ள மெடுலா என்ற இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வெளிநாட்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. அதன்பின் இஸ்ரேலில் உள்ள மக்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். லெபனான் மற்றும் காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வர அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் இந்து லெபனான் மீது இஸ்ரேல நடத்திய தாக்குதலில 2,800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 13 ஆயிரம் காயம் அடைந்திருந்தனர்.
புதிய போர்நிறுத்த அழைப்புக்கு அமெரிக்கா முயற்சித்து வரும்நிலையில் லெபனானில் இருந்து ராக்கெட் தாக்குதலில் வடக்கு இஸ்ரேலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் லெபனான் மீதான போரை இஸ்ரேல் அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பாக கருதப்படுகிறது.