நாட்டில் மனித உரிமைகளை மதியுங்கள்; பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
|பாகிஸ்தானில் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என அந்நாட்டு அதிகாரிகளிடம் அமெரிக்கா கூறியுள்ளது.
வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்காவில் வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளரான மேத்யூ மில்லர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். அவரிடம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் அடைத்திருப்பது பற்றி கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர் பதிலளித்து பேசினார்.
அவர் கூறும்போது, இந்த விசயம் பற்றி அந்நாட்டு கோர்ட்டுகளே முடிவு செய்ய வேண்டும் என நாங்கள் பல முறை கூறியிருக்கிறோம். இம்ரான் கானை பதவியில் இருந்து நீக்குவதில் அமெரிக்காவின் பங்கு உள்ளது என்ற குற்றச்சாட்டு தவறானது. இதனை நாங்கள் பலமுறை கூறி விட்டோம்.
முடிவாக, பாகிஸ்தானின் அரசியல் விவகாரம் என்பது, அந்நாட்டின் சட்டம் மற்றும் அரசியல் சாசனத்தின்படி அந்நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டிய விசயம் ஆகும் என்று கூறியுள்ளார்.
எனினும், இம்ரான் கானை விடுவிக்க கோரி போராட்டம் நடந்தபோது, இணையதள சேவையோ, மொபைல் போன் சேவையோ பல இடங்களில் மக்களுக்கு கிடைக்கவில்லை. இதுபற்றிய கேள்விக்கு மில்லர் பதிலளித்தபோது, உலகில் உள்ளதுபோல் பாகிஸ்தானில் பேச்சு சுதந்திரம் மற்றும் அமைதியாக கூடுதல் ஆகியவற்றிற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்.
வன்முறையை தவிர்த்து, அமைதியாக போராட்டத்தில் ஈடுபடும்படியே போராட்டக்காரர்களை கூறுகிறோம். அதேநேரத்தில், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தானிய அதிகாரிகளிடம் நாங்கள் கூறியிருக்கிறோம் என்றார்.