சிட்னி விமான நிலையத்தில் விமான என்ஜின் வெடித்ததில் தீ விபத்து
|புறப்பட்ட 10 நிமிடத்தில் என்ஜின் வெடித்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சிட்னி,
சிட்னி விமான நிலையத்தில் இருந்து பிரின்பேனுக்கு குவாண்டாஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று இன்று மதியம் 1 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) புறப்பட்டது. புறப்பட்ட சில மணிநேரத்தில் விமானத்தின் வலது என்ஜின் வெடித்ததால் தீ பற்றியது. இதனால் விமானம் 3வது ஓடுபாதையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் தீயை அணைத்தனர்.
இந்த விமானத்தில் பயணித்த 174 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அந்நாட்டு தனியார் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்தால் விமான நிலைய பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
விமான பயணி ஜார்ஜினா லூயிஸ் கூறுகையில், "விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களுக்கு பிறகு விமானத்தில் பலத்த சத்தம் கேட்டது. பிறகு வலதுப்புற என்ஜினில் சிக்கல் ஏற்பட்டதாக விமானி விளக்கினார். இதையடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது" என்றார்.