சீன பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை
|சீன பாதுகாப்புத்துறை மந்திரியுடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வியன்ட்டியன்,
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், லாவோஸ் நாட்டிற்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெறும் ஆசியான்(ASEAN) பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக இன்று லாவோஸ் நாட்டின் தலைநகர் வியன்ட்டியனுக்கு ராஜ்நாத் சிங் சென்றடைந்தார்.
இதே போல், ஆசியான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வியன்ட்டியன் நகருக்கு சீனாவின் பாதுகாப்புத்துறை மந்திரி டாங் ஜுன் சென்றுள்ளார். இதையடுத்து சீன பாதுகாப்புத்துறை மந்திரியை, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கிழக்கு லடாக்கில் ரோந்து செல்வது தொடர்பான விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டு, சமீபத்தில் இந்தியா-சீனா படைகள் டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து வாபஸ் பெறப்பட்ட நிலையில், தற்போது இருநாட்டு பாதுகாப்பு மந்திரிகள் இடையே நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.