< Back
உலக செய்திகள்
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்
உலக செய்திகள்

கதிர்வீச்சு, எலும்பு பலவீனம், பதற்றம்: விண்வெளியில் சுனிதா வில்லியம்சுக்கு அடுத்த சிக்கல்

தினத்தந்தி
|
9 Aug 2024 5:45 PM IST

நாசாவின் சமீபத்திய தகவலின்படி, சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் அநேகமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என்ற விண்வெளி வீரருடன் கடந்த ஜூன் 5-ம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவின் கேப் கனவெரல் ஏவுதளத்தில் இருந்து போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் புறப்பட்ட அவர்கள் 7-ந்தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்.

இருவரும் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு 13-ந்தேதி பூமிக்கு திரும்பும் வகையில் பயண திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் த்ரஸ்டர்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை மற்றும் ஹீலியம் கசிவால் விண்கலம் திரும்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டது. கோளாறு முழுமையாக சரி செய்யப்படாததால் இன்றுவரை இருவரும் விண்வெளி நிலையத்தில் தங்கி உள்ளனர்.

விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்யும் முயற்சியில் நாசாவும், போயிங் நிறுவனமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் த்ரஸ்டர்கள் சோதனை செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இதுதொடர்பாக, நாசாவும், போயிங் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகளும் தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தனர்.

"சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் பத்திரமாக இருக்கின்றனர். போயிங் விண்கலம் சரி செய்யப்பட்டதால், ஆகஸ்ட் மாத இறுதியில் திரும்பி வரலாம்" எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

ஆனால், நாசாவின் சமீபத்திய தகவலின்படி இருவரும் இந்த மாதம் பூமி திரும்ப வாய்ப்பு இல்லை. அநேகமாக அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரியில் இருவரும் பூமிக்கு திரும்பி வருவார்கள் என்று கூறுகின்றனர்.

விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்வதற்கான பல்வேறு திட்டங்களை ஆராய்ந்து வருவதாக நாசா நேற்று அறிவித்தது. மாற்று ஏற்பாடாக எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தை பயன்படுத்தி, 2025-ல் விண்வெளி வீரர்கள் இருவரையும் அழைத்து வரும் தீர்வு முன்மொழியப்பட்டுள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் வரும் செப்டம்பர் மாதம் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. அதில், 4 பேர் பயணிக்கலாம். அதில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோருக்கு இரண்டு இருக்கைகளை முன்பதிவு செய்வதற்கான திட்டம் குறித்து நாசா பேசி வருகிறது. அதாவது, பூமியில் இருந்து செல்லும் டிராகன் விண்கலத்தில் இரண்டு பேரை மட்டுமே ஏற்றிச் செல்வார்கள். திரும்பும்போது, அவர்களுடன் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் இணைந்து வருவார்கள். இந்த விவகாரத்தில் நாசா அடுத்த வாரம் இறுதி முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு தொடர்ந்து தாமதம் ஏற்படுவதால், விண்வெளியில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

விண்வெளி நிலையத்தில் பூமியில் இருப்பதுபோன்று வாழ்வதற்கு ஏற்ற சூழல், தூங்கும் அறைகள் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவை இருந்தாலும், இந்த செயற்கையான சூழல் எப்போதும் சவாலாகவே இருக்கும்.

காந்தப்புலத்தால் தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்வீச்சு அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதாவது, தென் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில், கதிர்வீச்சு அளவுகள் பூமியில் இருப்பதை விட 30 மடங்கு அதிகமாக இருக்கும் ஒரு புள்ளியை விண்வெளி நிலையம் கடந்து செல்கிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் மீது கதிர்வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

சுருக்கமாக சொல்லப்போனால், பூமியில் ஒரு வருடத்திற்கு அனுபவிக்கும் கதிர்வீச்சை விண்வெளி நிலையத்தில் ஒரு வாரத்தில் அனுபவிப்பார்கள்.

விண்வெளியில் சீரான ஈர்ப்புவிசை இல்லாததால் எலும்பு மஜ்ஜை இழப்பு ஏற்பட்டு, எலும்புகள் பலவீனமாகும் வாய்ப்பு அதிகம். தசைகளிலும் பாதிப்பு ஏற்படலாம். இது விண்வெளி வீரர்களின் செயல்திறனை பாதிக்கலாம். காயம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். இதையெல்லாம் விட, வெறும் 8 நாள் பயணம் 8 மாதங்களுக்கு நீடிப்பதால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதையும் பார்க்கவேண்டும். பயம் மற்றும் அமைதியின்மையால் ஒருவித பதற்றமும் ஏற்படலாம்.

இதில் நம்பிக்கை அளிக்கும் விஷயம் என்னவென்றால், ஸ்டார்லைனர் விண்கலத்தை சரிசெய்ய முடியாவிட்டாலும், விண்வெளி வீரர்களை மீட்பதற்கு வேறு வாய்ப்புகள் உள்ளன.

மேலும் செய்திகள்