இந்தியா அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது - போலந்தில் பிரதமர் மோடி உரை
|உலக நாடுகளுக்கு நட்புறவு நாடாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
வார்சா,
2 நாள் அரசுமுறைப்பயணமாக போலந்து நாட்டின் தலைநகர் வார்சா சென்றடைந்தார் பிரதமர் மோடி. போலந்து நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி இந்தியா வம்சாவளியினர் மத்தியில் பேசியதாவது:-
தனக்கு கிடைத்த அன்பான வரவேற்புக்கு போலந்து நாட்டு மக்களுக்கு நன்றி. அனைவருடனும் இணைய விரும்பும் இந்தியா அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது. புதிய இந்தியாவின் கொள்கை அனைத்து நாடுகளுடனும் நெருக்கத்தை பேணுவது. இன்று இந்தியா ஒவ்வொருவரின் வளர்ச்சியைப் பற்றி பேசுகிறது. மற்றவர்களைப் பற்றி சிந்திக்கிறது. இன்று உலகமே இந்தியாவை 'விஸ்வபந்து' என்று மதிக்கிறது. ஜாம் ஷாஹிப் நினைவாக இளைஞர் செயல் திட்டத்தை இந்தியா தொடங்கப் போகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 20 போலந்து இளைஞர்கள், இந்தியா வருமாறு அழைக்கப்படுவார்கள்.
இரக்க குணம் என்பது இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்றாகும். எந்த நாட்டிலும் எந்த பிரச்சினை வந்தாலும், முதலில் உதவி செய்யும் நாடு இந்தியாதான். இப்பகுதியில் நிரந்தர அமைதி நிலவுவதையே இந்தியா விரும்புகிறது. இந்த நேரத்தில் போர் தேவையில்லாதது. போருக்கான நேரம் இதுவல்ல. சவால்களை எதிர்கொள்ள நாம் ஒன்றாக இருக்க வேண்டும். உலக நாடுகளுக்கு நட்புறவு நாடாக இந்தியா திகழ்கிறது. போரின் போது இந்திய மாணவர்களுககு போலந்து உதவியது. அதற்கு இந்தியா தலைவணங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வார்சாவில் உள்ள ‛‛ஜாம்ஷாஹிப் மகாராஜா'' நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். இந்த நினைவிடம், இரண்டாம் உலக போரின் போது அகதிகளாக வந்த போலந்து நாட்டு குழந்தைகளுக்கு குஜராத்தில் ஜாம்ஷாஹிப் வம்சத்தைச் சேர்ந்த திக்விஜய்சிங்ஜி, ரஞ்சித்சிங்ஜி ஆகியோர் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.