ஐக்கிய அரபு அமீரகத்தில் மழை வேண்டி அதிபர், மக்கள் பிரார்த்தனை
|ஐக்கிய அரபு அமீரகத்தில் மழை வேண்டி அதிபர், ஆட்சியாளர்கள் மற்றும் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அபுதாபி,
ஐக்கிய அரபு அமீரகத்தில் மழை பெய்ய வேண்டி பொதுமக்கள் இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் என அதன் அதிபர் ஷேக் முகமது பின் சையது வலியுறுத்தினார். அமீரகத்திற்கு மழையும், இரக்கமும் அளித்து ஆசீர்வதிக்க வேண்டும் என வேண்டி கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த சலாத் அல் இஸ்திஸ்கா என்ற சடங்கு மற்றும் தண்ணீரின் முக்கியத்துவம் ஆகியவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இமாம்கள் மற்றும் வழிபாட்டாளர்கள் கைகளை உயர்த்தி இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதில், அஜ்மன் ஆட்சியாளர் ஷேக் உமைத் பின் ரஷீத் அல் நுவாமி, ராஸ் அல் கைமா ஆட்சியாளர் ஷேக் சவுத் பின் சாகிர் அல் குவாசிமி ஆகியோர் வழிபாட்டாளர்களுடன் இணைந்து நாடு முழுவதும் இஸ்திஸ்கா வழிபாட்டில் நேற்று ஈடுபட்டனர்.
இதில் தெய்வீக கருணை, அபரிமித மழைப்பொழிவு, வளம் செறிந்த பயிர்கள், அதிபர் மற்றும் அவரை பின்பற்றி நடக்கும் ஆட்சியாளர்கள் ஆகியோரை பாதுகாப்பது மற்றும் தேசத்தின் தலைவர்களுக்கு தெய்வீக வழிகாட்டுதல் ஆகியவற்றிற்காக அவர்கள் இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.