< Back
உலக செய்திகள்
மாலத்தீவு அதிபர் 6-ந்தேதி இந்தியா வருகை
உலக செய்திகள்

மாலத்தீவு அதிபர் 6-ந்தேதி இந்தியா வருகை

தினத்தந்தி
|
4 Oct 2024 7:33 PM IST

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வருகிற 6-ந்தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

மாலி,

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வருகிற 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். மாலத்தீவின் அதிபராக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி மற்றும் மந்திரிசபை உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முகமது முய்சு இந்தியாவிற்கு வந்திருந்தார்.

சமீபத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாக மாலத்தீவுக்கு சென்றிருந்தார். இந்திய பெருங்கடலில் இந்தியாவின் முக்கிய கடல்சார் கூட்டணி நாடாக மாலத்தீவு விளங்கி வருகிறது. இந்நிலையில், மாலத்தீவு அதிபரின் இந்திய வருகை, இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகமது முய்சு தனது இந்திய வருகையின்போது ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து இந்தியா-மாலத்தீவு இடையிலான இருதரப்பு, பிராந்திய மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதோடு, முகமது முய்சு மும்பை மற்றும் பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்