< Back
உலக செய்திகள்
அல்ஜீரிய ஜனாதிபதியுடன் வர்த்தகம், முதலீடு பற்றி ஜனாதிபதி முர்மு ஆலோசனை
உலக செய்திகள்

அல்ஜீரிய ஜனாதிபதியுடன் வர்த்தகம், முதலீடு பற்றி ஜனாதிபதி முர்மு ஆலோசனை

தினத்தந்தி
|
15 Oct 2024 2:12 AM IST

அல்ஜீரியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அப்தில் மஜித்துக்கு, ஜனாதிபதி முர்மு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

அல்ஜீர்ஸ்,

அல்ஜீரியா, மொரிடேனியா மற்றும் மலாவி ஆகிய 3 ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வரலாற்று சிறப்புமிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகருக்கு சென்றடைந்த ஜனாதிபதி முர்முவுக்கு நேற்று முன்தினம் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் மற்றும் அவருடைய மந்திரி சபை உறுப்பினர்கள் ஜனாதிபதி முர்முவை வரவேற்றனர். இந்நிலையில், அல்ஜீரியாவில் உள்ள எல் மவுராடியா அரண்மனையில் அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுனை, ஜனாதிபதி முர்மு நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் பற்றி இருவரும் விவாதித்ததுடன், இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதியான முடிவெடுக்கப்பட்டது என முர்மு கூறியுள்ளார்.

இதுபற்றி ஜனாதிபதி மாளிகை வெளியிட்டு உள்ள செய்தியில், அல்ஜீரியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அப்தில் மஜித்துக்கு, ஜனாதிபதி முர்மு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பின்போது, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தினர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அல்ஜீரியா நாட்டுக்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவுக்கு உறுதி கூறியதுடன், ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் வலுவான உள்ளார்ந்த ஈடுபாட்டை முர்மு மீண்டும் உறுதிப்படுத்தினார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்