< Back
உலக செய்திகள்
வெற்றிக்கு பின் முதன்முதலாக நான் பேசிய உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் - டிரம்ப்
உலக செய்திகள்

வெற்றிக்கு பின் முதன்முதலாக நான் பேசிய உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் - டிரம்ப்

தினத்தந்தி
|
7 Nov 2024 12:58 AM IST

பிரதமர் மோடியையும், இந்தியாவையும் உண்மையான ஒரு நண்பராக கருதுகிறேன் என பிரதமர் மோடியிடம் டிரம்ப் கூறியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி,

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்தது. இந்த தேர்தலில், ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள தேர்வாளர்களே வெற்றியை முடிவு செய்பவர்களாக உள்ளனர். இதனால், மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

இந்த தேர்தலில், ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிட்டனர். தேர்தல் நேற்று காலை முடிந்ததும் தேர்வாளர்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், பெரும்பான்மை பெறுவதற்கான 270 என்ற வாக்குகளை விட கூடுதலான வாக்குகளை பெற்று டிரம்ப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்பை தொலைபேசி வழியே தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். உலக அமைதிக்காக இரு தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்றுவது என உறுதி மேற்கொண்டனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

டிரம்ப் கூறும்போது, ஒட்டுமொத்த உலகமும் பிரதமர் மோடியை விரும்புகிறது. இந்தியா ஒரு பிரமிக்க வைக்கும் நாடு. பிரதமர் மோடி ஒரு உன்னதம் வாய்ந்த நபர் என்றார். பிரதமர் மோடியையும், இந்தியாவையும் உண்மையான ஒரு நண்பராக கருதுகிறேன் என பிரதமர் மோடியிடம் டிரம்ப் கூறியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெற்றி பெற்ற பின்பு முதன்முதலாக நான் பேசிய உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், 2-வது முறையாக பதவி வகிக்க இருக்கிறார்.

மேலும் செய்திகள்