< Back
தேசிய செய்திகள்
உக்ரைன் பயணம் பற்றி புதினிடம் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

உக்ரைன் பயணம் பற்றி புதினிடம் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி

தினத்தந்தி
|
27 Aug 2024 4:47 PM IST

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம், போர் முடிவுக்கு வருவதற்கான வழியை ஏற்படுத்த கூடும் என ஐ.நா.வின் பொது செயலாளர் அலுவலகம் நம்பிக்கை தெரிவித்து இருந்தது.

புதுடெல்லி,

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது இரண்டரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. தொடக்கத்தில் உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து மீட்டது.

போரை முடிவுக்கு கொண்டு வரும் தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை இதில் பெரிய பலன் எதனையும் தரவில்லை. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். ஆனால், இந்தியா அமைதி பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும், இரு நாடுகளும் போரை தீவிரப்படுத்தி உள்ளன.

இந்நிலையில், ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான மோதலில் அமைதியான ஒரு தீர்வு காணப்படுவதில் உந்துதல் ஏற்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி சமீபத்தில் உக்ரைன் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது, அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து பேசினார்.

அவருடைய இந்த பயணம் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் இந்த பயணம் போர் முடிவுக்கு வருவதற்கான வழியை ஏற்படுத்த கூடும் என ஐ.நா.வின் பொது செயலாளர் அலுவலகம் நம்பிக்கை தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், சமீபத்திய உக்ரைன் பயணம் பற்றி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பிரதமர் மோடி இன்று பேசினார். இந்த பயணம் பற்றி அவரிடம் விவாதித்து உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், ரஷிய-உக்ரைன் மோதல் பற்றிய கருத்துகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். உக்ரைனுக்கான சமீபத்திய பயணம் பற்றிய என்னுடைய பார்வைகளையும் பகிர்ந்து கொண்டேன்.

இந்த மோதலில் விரைவான, நீண்டகால மற்றும் அமைதியான முடிவு ஒன்று ஏற்படுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் இந்தியாவின் உள்ளார்ந்த ஈடுபாட்டையும் மீண்டும் வலியுறுத்தினேன் என பகிர்ந்து உள்ளார்.

பிரதமர் மோடி அவருடைய பயணம் பற்றி அமெரிக்க அதிபர் பைடனை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு நேற்று பேசினார்.

அப்போது, பேச்சுவார்த்தை மற்றும் நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலாண்மை செய்யும் வகையில் செயல்பட்டு அந்த பகுதியில் விரைவில் அமைதியை திரும்ப கொண்டு வருவதற்கு, இந்தியாவின் முழு ஆதரவை தெரியப்படுத்தினேன் என்று பிரதமர் மோடி நேற்று கூறினார்.

சமீபத்திய உக்ரைன்-ரஷிய போர் நிலவரம்

சில நாட்களுக்கு முன் ரஷியாவின் முக்கிய பாலம் ஒன்றை உக்ரைனின் படைகள் தகர்த்தன. மற்றொரு பாலம் ஒன்றும் தகர்க்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. இது ரஷியாவுக்கு ஆத்திரம் ஏற்படுத்தியது. இந்த சூழலில், உக்ரைன் நாட்டின் மீது பெரிய அளவில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகள் ஆகியவற்றை கொண்டு ரஷிய படைகள் நேற்று காலை திடீரென தாக்குதலை நடத்தியது. தொடர்ந்து பல மணிநேரம் இந்த தாக்குதல் நீடித்தது.

இதில், உக்ரைன் நாட்டின் பல்வேறு கட்டிடங்கள், எரிசக்தி உட்கட்டமைப்புகள் சேதமடைந்து உள்ளன. உக்ரைனின் கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ரஷியா முன்னேறி சென்று தாக்குதலை நடத்தி உள்ளது. பல்வேறு பாலிஸ்டிக் ரக மற்றும் நவீன ராக்கெட்டுகள் கொண்டும் தாக்குதல் தொடர்ந்தது.

கீவ் நகரின் சில பகுதிகளில் மின் விநியோகத்திலும் இடையூறு ஏற்பட்டது. இதனை உக்ரைனின் விமான படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், பல்வேறு வகைகளை சேர்ந்த 100 ராக்கெட்டுகள், 100 ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டன. உக்ரைனின் கார்கீவ், கீவ் மற்றும் ஒடிசா உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நாட்டின் 15 பகுதிகள் என ஏறக்குறைய உக்ரைனின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், போர் பாதிப்புகள் தொடர்ந்து வருகின்றன.

மேலும் செய்திகள்