< Back
உலக செய்திகள்
உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி; அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு
உலக செய்திகள்

உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி; அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு

தினத்தந்தி
|
23 Aug 2024 3:06 PM IST

பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.

கீவ்,

2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் போலந்து சென்றார். 45 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக போலந்து சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். தலைநகர் வார்சா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், நேற்று முன் தினம் போலந்தில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இதனை தொடர்ந்து போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டூடாவையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இதனிடையே, போலந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி உக்ரைன் புறப்பட்டார். போலந்தில் இருந்து ரெயில் மூலம் பிரதமர் மோடி இன்று உக்ரைன் சென்றடைந்தார். உக்ரைன் சுதந்திரம் பெற்றபின் அந்நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.

தலைநகர் கீவ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உக்ரைனில் வாழும் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், உக்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ரஷியா உடனான போரில் உக்ரைனில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த காணொளி காட்சிகளை பிரதமர் மோடிக்கு அதிபர் ஜெலன்ஸ்கி திரையிட்டு காண்பித்தார். மேலும், போரால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் அதிபர் ஜெலன்ஸ்கி விளக்கினார்.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி ரஷியா சென்றிருந்தார். அப்போது ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சனம் செய்திருந்தார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் உலகின் மிகப்பெரிய குற்றவாளியை கட்டி அணைப்பதை பார்ப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று பிரதமர் மோடியை ஜெலன்ஸ்கி விமரசனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய பிரதமர் மோடி உக்ரைன் சென்றுள்ள நிலையில் ரஷியா - உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? என்ற விவாதம் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்