மோதலுக்கான நேரம் இதுவல்ல: கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
|ஆட்சி எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் நாங்கள் முன்னேறி சென்றது இல்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கரீபியன் பகுதி தீவுகளில் ஒன்றான கயானாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அரசு முறை பயணமாக சென்றார். அந்த நாட்டின் மக்கள் தொகை 8.14 லட்சம் ஆகும். இதில் தமிழர்கள் உட்பட இந்திய வம்சாவளியினர் 3.20 லட்சம் பேர் உள்ளனர். அதாவது கயானாவின் மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். ஆவர். அந்த நாட்டின் தற்போதைய அதிபர் முகமது இர்பான் அலி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் உத்தர பிரதேசத்தை பூர்விகமாகக் கொண்டவர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது முதல்நாள் பயணத்தில் கயானா அதிபர் முகமதுவை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. .
இதற்கிடையே, கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது- ஆட்சி எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் நாங்கள் முன்னேறிச் சென்றது இல்லை. அது விண்வெளியாக இருந்தாலும் சரி, கடலாக இருந்தாலும் சரி, அது உலகளாவிய ஒத்துழைப்புடன் தொடர்புடையது. சர்வதேச மோதலாக மாறக்கூடாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இந்த உலகைப் பொறுத்தவரை, இது மோதலுக்கான நேரமல்ல, மோதல்களை உருவாக்கும் நிலைமைகளை கண்டறிந்து அதை அகற்றுவதற்கான நேரம்" என்றார்.