கனடாவில் இந்து கோவில் மீது நடந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
|கனடாவில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டியது உறுதி செய்யப்பட வேண்டும் என அந்நாட்டு அரசை தொடர்பு கொண்டு இந்தியா தெரிவித்து உள்ளது.
டொரன்டோ,
கனடாவில் டொரன்டோ மாகாணத்துக்கு அருகே ஆன்டாரியோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் நகரில் இந்து சபா கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் தூதரக முகாம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது.
கனடாவில் தூதரக முகாமுக்கு இந்திய அதிகாரிகளின் வருகையை கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தினர். கோவிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த இந்து மக்களை விரட்டியடித்தனர்.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி தன்னுடைய கண்டனங்களை வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், கனடாவில் இந்து கோவில் மீது நடந்த திட்டமிட்ட தாக்குதலுக்கு நான் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன். நம்முடைய தூதர்களை அச்சுறுத்துவதற்கான கோழைத்தன முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு உள்ளனர். இதுபோன்ற வன்முறை செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தி விட முடியாது.
கனடா நாட்டு அரசு, நீதியை உறுதிப்படுத்தி,, சட்ட விதியை நிலைநாட்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்து உள்ளார். கனடா தொடர்புடைய சர்ச்சை தொடங்கியதில் இருந்து பிரதமர் மோடி வெளியிட்ட முதல் அறிக்கை இதுவாகும். உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி இருக்கிறார் என பிரதிபலிக்கும் வகையில் இது அமைந்துள்ளது என அதுபற்றிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் இந்து கோவில் மீது நடந்த தாக்குதலுக்கு, அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் பியரி பொய்லீவ்ரி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது முற்றிலும் ஏற்று கொள்ள முடியாதது என்றும் கூறினார். கனடாவில் இந்துக்கள் மீதும் இந்து கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட செய்தியில், கனடா அரசை தொடர்பு கொண்டு, இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து அனைத்து வழிபாட்டு தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டியது உறுதி செய்யப்பட வேண்டும் என தெரிவித்து உள்ளார். இந்த சூழலில், பிரதமர் மோடியின் இந்த கண்டனம் வெளியிடப்பட்டு உள்ளது.