கனடாவில் இரவு நேரங்களில் வானில் தோன்றும் 'ஒளி தூண்கள்'
|கனடாவில் இரவு நேரங்களில் வானத்தில் 'ஒளி தூண்கள்' எனப்படும் வெளிச்சம் தோன்றுகிறது.
ஒட்டாவா,
கனடாவின் அல்பெர்ட்டா நகரில் இரவு நேரங்களில் வானத்தில் 'ஒளி தூண்கள்' என அழைக்கப்படும் வெளிச்சம் தோன்றுகிறது. காண்போரை பிரமிக்க வைக்கும் இந்த வெளிச்ச தூண்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதை பார்த்த பலரும், இது வேற்றுகிரக வாசிகளின் செயல் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் கனடாவில் இது போன்ற 'ஒளி தூண்கள்' பெரும்பாலும் குளிர் காலங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இது இயற்கையாக உருவாகும் ஒரு ஒளியியல் மாயை(Optical Illusion) என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வளிமண்டலத்தில் 0.02 மில்லி மீட்டர் அளவு கொண்ட அறுகோண வடிவிலான பனி படிகங்கள் மீது ஒளி பட்டு சிதறும்போது இது போன்ற 'ஒளி தூண்கள்' தோன்றுவதாக கூறப்படுகிறது.
பெரும்பாலும் தெரு விளக்குகள், டிராபிக் விளக்குகள் போன்றவற்றில் இருந்து வரும் வெளிச்சம் வளிமண்டலத்தில் பரவும்போது இந்த 'ஒளி தூண்கள்' தோன்றுகின்றன. இந்த ஒளி தூண்களை கனடா மட்டுமின்றி ரஷியா மற்றும் ஸ்காண்டினேவியாவின் ஒரு சில பகுதிகளிலும் குளிர் காலத்தில் இரவு நேரங்களில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.