அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கப்படும்: பிரிட்டன் புதிய பிரதமர் உரை
|பிரிட்டனின் புதிய பிரதமராக ஸ்டார்மரை மன்னர் சார்லஸ் நியமித்தார்.
லண்டன்,
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன.
தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 121 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் தொழிலாளர் கட்சி பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, தனது பிரதமர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து, ஆட்சியமைக்க தொழிலாளர் கட்சியின் தலைவர் ஸ்டார்மருக்கு மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பினை ஏற்று பக்கிங்காம் அரண்மனைக்கு ஸ்டார்மர் சென்றர். தொடர்ந்து பிரிட்டனின் புதிய பிரதமாராக ஸ்டார்மரை மன்னர் நியமித்தார். பிரிட்டனின் புதிய பிரதமராக ஸ்டார்மர் நியமிக்கப்பட்டதை பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமர் ஸ்டார்மர் அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
" பாதுகாப்பற்ற உலக சூழலில் சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறோம். மகிழ்ச்சியானதொடக்கத்தை உணர்வோம். மாற்றத்திற்கான பணி உடனடியாக தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை. நாங்கள் பிரிட்டனை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்பதில் சந்தேகமில்லை.
புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும். அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கப்படும். உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படும்."
இவ்வாறு அவர் பேசினார்.