
'உம்ரா'புனித பயணம் செல்ல மக்கள் ஆர்வம்: அமீரகம் - சவுதி அரேபியா விமான கட்டணம் கிடுகிடு உயர்வு

ரமலான் நோன்பு இருப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரை விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.
துபாய்,
ரமலான் மாதம் அடுத்த மாதம் (மார்ச்) தொடங்க இருப்பதையொட்டி அமீரகத்தில் இருந்து சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் விமான கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ரமலான் மாதம் இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இந்த மாதம் முழுவதும் இஸ்லாமியர்களால் நோன்பு வைக்கப்படுகிறது. இந்த நாட்களில் நோன்பு கடைப்பிடிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல் மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர்.
இது இஸ்லாத்தின் 5 அடிப்படை கடமைகளில் நோன்பு கடைபிடிப்பது 3-வது கடமை ஆகும். திருக்குர்ஆன் இறங்கிய புனித மாதம் என்பதால் ரமலான் மாதம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. அமீரகத்தில் ரமலான் மாதம் அடுத்த மாதம் (மார்ச்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'உம்ரா' என்றால் 'தரிசனம் செய்வது'என்று பொருள். புனித ஹபாவை தரிசனம் செய்வதற்கு உம்ரா என்று கூறப்படும். இந்த பயணம் ரமலான் மாதத்தையொட்டி சவுதி அரேபியாவின் மெக்கா நகருக்கு செல்ல பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ரமலான் மாதம் முழுவதையும் மெக்கா நகரிலேயே கழித்துவிட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றனர். இதற்காக அமீரகத்தில் இருந்து உம்ரா பயணம் செல்ல பலர் திட்டமிட்டு வருகின்றனர். இதன் காரணமாக சவுதி அரேபியாவுக்கு செல்லும் விமான கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அமீரகத்தில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெத்தா நகருக்கு செல்ல கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் ரூ.13, 842 கட்டணமாக இருந்தது. தற்போது துபாயில் இருந்து ஜெத்தாவுக்கு ஒரு வழி பயண கட்டணம் ரூ.23,389 ஆக இருக்கிறது. சராசரியாக இருவழி பயண கட்டணம் ரூ.33,412 ஆக அதிகரித்து உள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த விமான கட்டணமானது 140 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எனவே, உம்ரா பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் தங்களது பயண திட்டத்தை முன்பே வகுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதன் மூலம் தேவையற்ற பாதிப்புகளை தவிர்க்க முடியும். சவுதி அரேபியாவுக்கு செல்ல விசா உள்பட நடைமுறைகள் எளிமையாக்கப் பட்டுள்ளதால் உம்ரா செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.