வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி
|வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசா,
பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடந்த ஓர் ஆண்டாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் இதுவரை சுமார் 43 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் காசாவில் போரை நிறுத்த வேண்டுமென உலக நாடுகள் இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழிக்கும் வரையில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறி வரும் இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களாக வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று பிற்பகுதியில் வடக்கு காசாவில் பெய்ட் லாஹியா நகரில் உள்ள ஒரு வீடு மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசா சுகாதார அமைச்சகத்தின் அவசர சேவை வழங்கிய பட்டியலின்படி, இறந்தவர்களில் 8 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் அடங்குவர். இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய ராணுவத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் வெளியாகவில்லை.