< Back
உலக செய்திகள்
Imran Khan party office
உலக செய்திகள்

இம்ரான் கானின் கட்சி அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
4 Jun 2024 8:22 AM GMT

பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக கூறி தொடரப்பட்ட 'சிபர்' வழக்கு உள்ளிட்ட மூன்று முக்கிய வழக்குகளில் இருந்து இம்ரான் கான் விடுவிக்கப்பட்டார்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (வயது 71) மீது கிட்டத்தட்ட 200 வழக்குகள் உள்ளன. இதில் சில வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற வழக்குகள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது.

அவ்வகையில், பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக கூறி தொடரப்பட்ட 'சிபர்' வழக்கு உள்ளிட்ட மூன்று முக்கிய வழக்குகளில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார். இது இம்ரான் கானுக்கு மிகப்பெரிய நிவாரணமாக கருதப்படுகிறது. எனினும், வேறு சில வழக்குகளில் தண்டனை பெற்றிருப்பதால் இப்போதைக்கு சிறையில் இருந்து விடுதலை பெற வாய்ப்பில்லை

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் மத்திய அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றும்படி ஐகோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 24-ம் தேதி பி.டி.ஐ. அலுவலகத்தில் தலைநகர மேம்பாட்டு ஆணையம் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில், சட்டவிதிகளை மீறியதாக கூறி, கட்சி அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து இஸ்லாமாபாத் ஐகோட்டில் பி.டி.ஐ. கட்சி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்