பாகிஸ்தான்: புகைமூட்டம் எதிரொலி; பஞ்சாப்பில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 24-ந்தேதி வரை விடுமுறை
|பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் புகைமூட்டம் எதிரொலியாக அரசு, தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 24-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
லாகூர்,
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காற்று தரக்குறியீடு இதுவரை இல்லாத வகையில் சாதனை பதிவாக, 1,600 என்ற அளவில் உயர்ந்து உள்ளது. காற்றின் தரம் மோசமடைந்து உள்ள சூழலில், பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன்படி, 17-ந்தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், புகைமூட்டம் மற்றும் குறைவான தொலைவையே பார்க்க கூடிய சூழல் போன்றவற்றால், அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 24-ந்தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால், அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் ஆன்லைன் வழியே கல்வி பயிற்சியை தொடர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனினும், முர்ரீ மாவட்டத்திற்கு இதற்கு விதிவிலக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு, புகைமூட்டம் பரவி நிலைமை மோசமடைந்த நிலையில், லாகூர் மற்றும் முல்தான் நகரங்களில் வாரத்திற்கு 3 நாட்கள் வரை முழு ஊரடங்கை பஞ்சாப் அரசு நேற்று அமல்படுத்தியது. இதன்படி, இன்றும் நாளையும் இந்த முழு ஊரடங்கு தொடரும். வருகிற திங்கட்கிழமை முதல் 3 நாட்களுக்கு நிலைமை கண்காணிக்கப்படும் என அரசு தெரிவித்து உள்ளது.