< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்

பாகிஸ்தான்: குவெட்டா ரெயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு: 24 பேர் உடல் சிதறி பலி

தினத்தந்தி
|
9 Nov 2024 12:37 PM IST

பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் 24 பேர் உயிரிழந்த நிலையில், 40 பேர் காயமடைந்தனர்.

பெஷாவர்,

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரெயில் நிலையத்தில் இன்று காலை பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த பயங்கர குண்டுவெடிப்பில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்திற்கு முன்பாக அங்கிருந்து ரெயில் ஒன்று புறப்பட்டதாகவும், அந்த ரெயில் புறப்படுவதற்கு முன்பாக இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மற்ற நாட்களை விட இன்று ரெயில் நிலையத்தில் குறைவான எண்ணிக்கையில் பயணிகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். தற்போது சம்பவ இடத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்