அழியும் நிலையில் உலகில் 3-ல் ஒரு பங்கு மரங்கள்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்
|கொலம்பியா நாட்டில் நடந்த ஐ.நா.வின் பல்லுயிர் மாநாட்டில், 192 நாடுகளில் உள்ள மரங்கள் அச்சுறுத்தலின் கீழ் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காலி,
உலக அளவில் பருவநிலை மாற்றங்களால் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், 38 சதவீத மர இனங்கள் அழியும் நிலையில் உள்ளன என்ற அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது.
கொலம்பியா நாட்டின் காலி நகரில் நடந்த ஐ.நா.வின் பல்லுயிர் மாநாட்டில், பல்லுயிர் நெருக்கடி பற்றிய அளவீடுகள் சுட்டி காட்டப்பட்டன. இதில், உலக நாடுகள் கலந்து கொண்டன. இயற்கை வாழ்விடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைவு ஆகியவற்றின் விரைவான வீழ்ச்சியை பற்றி உரையாடுவது என்ற நோக்கில் இந்த மாநாடு முன்னெடுத்து செல்லப்பட்டு உள்ளது.
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பின் எச்சரிக்கை பட்டியலில் (சிவப்பு பட்டியல்) உலகில் 3-ல் ஒரு பங்கு மரங்கள் அழியும் நிலையில் உள்ளன என சுற்றுச்சூழலுக்கான விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. விவசாயத்திற்காக காடுகளை அழித்தல் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்காக மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட மனித நடவடிக்கைகள் மர இனங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவையாக உள்ளன.
பூச்சிகள் மற்றும் நோய்கள் உள்ளிட்டவையும் மித அளவிலான தட்பவெப்பம் கொண்ட பகுதிகளில் மரங்களின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கின்றன. இதனால், மரங்களை சார்ந்து வாழ கூடிய பிற இனங்களும் பெரிய அளவில் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றன. இவற்றில் பறவைகள், பாலூட்டிகள் மற்றும் பூச்சிகளும் அடங்கும்.
இந்த நெருக்கடிக்கு எதிராக, மர இனங்களை அழியும் நிலையில் இருந்து பாதுகாப்பதற்காக கியூ பகுதியில் உள்ள ராயல் பொட்டானிக் கார்டன்கள் போன்ற அமைப்புகளில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் பணியாற்றி வருகின்றனர். எனினும், 192 நாடுகளில் உள்ள மரங்கள் அச்சுறுத்தலின் கீழ் உள்ளது என்பதே இந்த விசயத்தில் காணப்படும் சவாலின் தீவிரம் பற்றி உணர்த்தும்.
இதனால், மேக்னோலியா, ஓக் மற்றும் எபோனி உள்ளிட்ட மரங்கள் அதிக அச்சுறுத்தல் வகைப்பாட்டில் உள்ளன. இதேபோன்று, புலம்பெயர் பறவைகள், ஐரோப்பிய முள்ளம்பன்றிகளும் எச்சரிக்கை பட்டியலில் உள்ளன. இங்கிலாந்து நாட்டின் கிரே பிளோவர் மற்றும் டன்ளின் உள்ளிட்ட 4 பறவை இனங்கள் அழியும் பிரிவில் உள்ளன.
2030-ம் ஆண்டுக்குள் உலகளவில் 30 சதவீத நிலங்கள் மற்றும் கடல்களை பாதுகாக்கும் நோக்கினை இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் கொண்டுள்ளனர். எனினும் இதற்காக, கூடுதலான நிதி ஆதரவு மற்றும் வலுவான தேசிய கொள்கைகளும் அவசர தேவையாக உள்ளது என்றும் மாநாட்டில் சுட்டி காட்டப்பட்டு உள்ளது. இந்த மாநாடு நவம்பர் 1-ந்தேதி நிறைவு பெற திட்டமிடப்பட்டு உள்ளது.