< Back
உலக செய்திகள்
டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியது யார்? வெளியான பரபரப்பு தகவல்
உலக செய்திகள்

டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியது யார்? வெளியான பரபரப்பு தகவல்

தினத்தந்தி
|
14 July 2024 6:39 AM GMT

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது டிரம்பை குறிவைத்து கூட்டத்தில் இருந்த ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்பிற்கு காது பகுதியில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மேடையில் இருந்து பாதுகாவலர்கள் புடை சூழ வெளியேறினார். இந்த தாக்குதலை அமெரிக்க நாட்டின் உளவுத்துறை உறுதி செய்துள்ளது. துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு ஆளான டிரம்ப் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உள்ளூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, துப்பாக்கி சூடு நடத்தியவரின் அடையாளம் தெரியவந்துள்ளது. 20 வயதான தாமஸ் மேத்யூ குரூக்ஸ் என்ற இளைஞர் டொனால்டு டிரம்பை துப்பாக்கியால் சுட்டுள்ளார். டிரம்பிற்கு எதிராக படுகொலை முயற்சி நடந்ததிருப்பதாக எப்.பி.ஐ கூறியுள்ளது. படுகொலை முயற்சிக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துப்பாக்கி சூடு நடத்திய தாமஸ் மேத்யூ குரூக்ஸ் பென்சல்வேனியாவில் வசித்து வந்து இருக்கிறார். இவரை பற்றிய மேலும் விவரங்கள் கிடைத்தால் உடனடியாக தருமாறு எப்.பி.ஐ போலீசார் அமெரிக்க மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். ஏ.ஆர். ரக அசால்ட் ரைபிளை துப்பாக்கி சூடு நடத்த அந்த இளைஞர் பயன்படுத்தியிருக்கிறார். பிரசார கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகே உள்ள கட்டிடத்தின் மேற்கூரையில் நின்று டொனால்டு டிரம்பை சுட்டுள்ளார். பலமுறை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறார் அந்த இளைஞர். எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் இருந்து டொனால்டு டிரம்ப் உயிர் தப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்