அமெரிக்காவின் மிக வயதான பெண் உயிரிழந்தார்
|அமெரிக்காவில் வாழும் மிகவும் வயதானவராக அறியப்பட்ட எலிசபெத் பிரான்சிஸ் உயிரிழந்தார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்தவர் எலிசபெத் பிரான்சிஸ் (வயது 115). அமெரிக்காவில் வாழும் மிகவும் வயதானவராக அறியப்பட்ட இவர் உலகின் மூன்றாவது வயதானவராகவும் இருந்தார். கடந்த சில நாட்களாக எலிசபெத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். 5 தலைமுறைகளைக் கண்ட இவரது மறைவுக்கு மகள், பேத்தி என பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எலிசபெத் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை டெக்சாஸின் ஹூஸ்டனில் கழித்துள்ளார். 1909-ம் ஆண்டு ஜூலை 25-ந்தேதி லூசியானாவில் பிறந்த எலிசபெத் பிரான்சிஸ் அமெரிக்காவில் 20 ஜனாதிபதிகளின் ஆட்சியை கண்டுள்ளார். இந்த ஆண்டின் முற்பகுதியில் தனது 115-வது பிறந்தநாளில் எலிசபெத், நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பது குறித்து கூறியிருந்தார்.