வடகொரிய வீரர்கள் ரஷியா சென்ற விவகாரம்: ஜோ பைடன் கவலை
|உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிடுவதற்காக வடகொரியாவை சேர்ந்த வீரர்கள் 10 ஆயிரம் பேர் ரஷியாவுக்கு சென்றனர்.
மாஸ்கோ,
ரஷியா-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அதேபோல் ரஷியாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கி வருகிறது ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா ராணுவம் நேரடியாக களத்தில் இறங்கி உள்ளது. அதிபர் கிம் ஜான் அன் தன் ராணுவத்தின் அதிசிறப்பு படையை சேர்ந்த 10 ஆயிரம் ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு வழங்கி உள்ளதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக உக்ரைனை எதிர்த்து சண்டையிட உள்ள வடகொரியா வீரர்கள் குர்ஸ்க் நகரில் முகாமிட்டுள்ளனர். அவர்களுக்கான முழு செலவையும் ரஷியா ஏற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சீருடைகள், போலி அடையாள ஆவணங்களை வழங்கி வடகொரியா வீரர்களை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வடகொரிய வீரர்கள் ரஷியாவுக்கு சென்றதாக வெளியாகியிருக்கும் தகவல் கவலை அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். மேலும், வடகொரியா வீரர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்தால் உக்ரைன் பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் ஜோ பைடன் கூறியுள்ளார்.