< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்

புது வருடம் பிறந்தது: ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் மக்கள் கோலாகல கொண்டாட்டம்

தினத்தந்தி
|
31 Dec 2024 4:32 PM IST

ஆங்கில வருட பிறப்பை முதலில் வரவேற்கும் வகையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இசை திருவிழாக்கள் நடத்தியும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக்லாந்து,

புது வருட பிறப்புக்காக மக்கள் அனைவரும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள். நள்ளிரவு 12 மணி நெருங்க நெருங்க அனைவரின் மனதிலும் உற்சாகம் பிறக்கும். ஆங்கில புது வருட பிறப்பை வரவேற்கும் வகையில், நம்மூரில் பலர் வீடுகளின் முன் வண்ணமய கோலமிட்டு வரவேற்க தயாராகி விடுவார்கள். பொங்கல், தீபாவளி பண்டிகைகளை போன்று ஆங்கில வருட பிறப்பையும் நம்மூர் மக்கள் கொண்டாடி மகிழ்வார்கள். சிலர் விளக்குகள், தீபங்களை ஏற்றியும் வரவேற்பார்கள்.

அதற்கு அடுத்த சில நாட்களில் பொங்கல் பண்டிகையும் வரவுள்ளது. இந்த நிலையில், ஆங்கில புது வருடம் வெளிநாடுகளில் நமக்கு முன்பே பிறந்து விடுகிறது. இதன்படி நியூசிலாந்து நாட்டில் புது வருடம் பிறந்து விட்டது. வண்ண வண்ண வான வேடிக்கைகள், பட்டாசு வெடிப்புகளுடன் மக்கள் அதனை வரவேற்று வருகின்றனர். நியூசிலாந்து நாடு முதலில் 2025-ம் ஆண்டை வரவேற்கும் நாடாக உள்ளது. அதனை தொடர்ந்து, ஆஸ்திரேலியா புதுவருட பிறப்பை வரவேற்கும். அந்நாட்டின் சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்கள் புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபடும்.

தொடர்ந்து, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும், அவற்றுடன் சீனா மற்றும் பிலிப்பைன்சும் அடுத்தடுத்த சில மணிநேரங்களில் 2025-ம் ஆண்டை வரவேற்கும். புது வருட பிறப்பை ஒட்டுமொத்த உலகமும் வரவேற்பதற்கு 26 மணிநேரம் எடுக்கும்.

இந்நிலையில், நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் உள்ள ஸ்கை டவரில் நள்ளிரவில் பட்டாசுகள் வெடித்து புதுவருட பிறப்பை மக்கள் வரவேற்றனர். எனினும், உலகில் 2025-ம் ஆண்டை முதன்முதலில் கிரிபாட்டி, டோங்கா சமோவா தீவுகள் வரவேற்றன. பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவுகளில் 2025-ம் ஆண்டு பிறந்தது. தொடர்ந்து பல்வேறு நகரங்களிலும் இசை திருவிழாக்களும் நடைபெறும்.

மேலும் செய்திகள்