சீனாவில் பரவ தொடங்கிய புதிய வைரஸ்
|சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) தொற்று அதிகமாக பரவி வருகிறது.
பெய்ஜிங்,
கோவிட் பெருந்தொற்றை தொடர்ந்து தற்போது சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலால் மருத்துவமனைகள் நிரம்பி காணப்படுகின்றன. எச்.எம்.பி.வி, இன்ப்ளூயன்சா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட்-19 போன்ற பல வைரஸ்கள் ஒரே நேரத்தில் பரவி வருவதாக அந்நாட்டு செய்திநிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் குளிர்காலம் மற்றும் இலையுதிர் காலத்தில் இந்த சுவாச நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறையினர் கணித்துள்ளனர். சீனாவில், எச்.எம்.பி.வி (HMPV), 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் வடக்கு மாகாணங்களில் அதிக பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.
இதனால் சுவாச நோய்கள் அதிகரித்து வரும் போதிலும், சீன அரசாங்கமோ அல்லது உலக சுகாதார அமைப்போ (WHO) அதிகாரபூர்வமாக இன்னும் எந்த எச்சரிக்கையையும் வெளியிடவில்லை. இருப்பினும் சீன அரசு கண்காணிப்பு குழுவை அமைத்து பாதிப்புகளை கண்காணித்து வருகிறது.
எச்.எம்.பி.வி:
எச்.எம்.பி.வி என்பது சுவாச ஒத்திசைவு வைரஸ் ( respiratory syncytial virus) (RSV), மீசிலெஸ், மம்ஸ் போன் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. எச்.எம்.பி.வி என்பது சுவாச தொற்றுநோய் வைரஸ் ஆகும். இது மேல் மற்றும் கீழ் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் அனைத்து வயதினருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் முதன்முதலாக 2001-ல் கண்டறியப்பட்டது.
நோய் அறிகுறிகள் :
எச்.எம்.பி.வி இன் அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்த்தொற்றுகளின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். இருமல், காய்ச்சல், நாசி நெரிசல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். கடுமையாகும் போது
மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியாவுக்கு வழிவகுக்கலாம்.
நோய் பரவும் முறை:
*மற்ற வைரஸ்களைப் போலவே மனித மெட்டாப் நியூமோ வைரஸும் பரவுகிறது.
*இருமல் மற்றும் தும்மல் மூலம் பரவுகிறது.
*கைக்குலுக்குதல் மற்றும் தொடுதல் மூலமும் பரவுகிறது.
*சுத்தமற்ற பகுதிகளில் கையை வைத்துவிட்டு பின்னர் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதன் மூலம் பரவுகிறது.
*இந்த வைரஸால் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உடையவர்கள் எளிதாக பாதிக்கப்படுகின்றனர்.
நோய் தடுப்பு முறை:
*குறைந்தது 20 விநாடிகள் சோப்பு போட்டு கையை கழுவ வேண்டும்.
*கைக்கழுவாமல் முகத்தை தொடக்கூடாது.
*நோய் அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
*நாம் அடிக்கடி தொடும் கதவு கைப்பிடிகள் போன்றவற்றை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
இந்த வைரஸுக்கு சிகிச்சையோ, தடுப்பூசியோ தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.