மயோட் தீவை சூறையாடிய சிடோ புயல்.. 1,000 பேர் பலி?
|புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது என மயோட் நிர்வாகி கூறி உள்ளார்.
மமுத்சோ:
இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் நாட்டின் அருகே அமைந்துள்ளது மயோட் தீவு. இந்த தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. 3 லட்சத்து 20 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட இந்த தீவை நேற்று சிடோ என்ற புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 124 மைல் வேகத்தில் காற்று வீசியது. கனமழையும் வெளுத்து வாங்கியது. புயலால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
நேற்று இரவு நிலவரப்படி 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியானது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. பல வீடுகளின் இடிபாடுகளில் சிக்கியவர்கள் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர். எனவே, புயல், மழையால் கிட்டத்தட்ட 1,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுபற்றி மயோட் நிர்வாகி பிரான்காயிஸ் சேவியர் பியூவில்லி கூறுகையில், 'புயல் மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கலாம். ஆயிரக்கணக்கானவர்கள் கூட இருக்கலாம். இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது' என்றார்.