< Back
உலக செய்திகள்
SpaceX  deorbit vehicle  International Space Station
உலக செய்திகள்

விண்வெளி நிலையத்தை அப்புறப்படுத்த பிரத்யேக விண்கலம்.. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது

தினத்தந்தி
|
28 Jun 2024 5:05 PM IST

டிஆர்பிட் விண்கலமும், சர்வதேச விண்வெளி நிலைய பாகங்களும் வளிமண்டலத்தில் நுழையும்போது, அவை இரண்டும் உடைந்து எரியும்.

நியூயார்க்:

பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில், பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களால் கட்டமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் இந்த விண்வெளி நிலையத்தில் உலக நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தங்கியிருந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தின் திட்டப் பணிக்காலம் 2030-ம் ஆண்டு முடிகிறது. அதன்பின்னர் விண்வெளியில் இருந்து அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அப்புறப்படுத்தி வளிமண்டலத்திற்கு கொண்டு வருவதற்காக பிரத்யேக விண்கலம் உருவாக்கப்படுகிறது. இந்த பணியை எலான்மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்துள்ளது.

இதற்காக முதலில் மார்ச் மாதம் அமெரிக்க நிறுவனங்களிடம் திட்ட வரைவுகளை கேட்டது. அதன்பின் செப்டம்பர் மாதத்திலும் கேட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்தின் அமெரிக்க பகுதிகளை பாதுகாப்பாக வளிமண்டலத்திற்கு கொண்டு வருவதற்கான "விண்வெளி இழுவை" வாகனம் தொடர்பாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் ஒட்டுமொத்த விண்வெளி நிலையத்தையும் அப்புறப்படுத்துவதற்கான டிஆர்பிட் விண்கலம் தயாரிக்கும் பணி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

யுஎஸ் டிஆர்பிட் வாகனத்தை (விண்கலம்) உருவாக்கி வழங்குவதற்கு ஸ்பேஸ்எக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தின் மதிப்பு 843 மில்லியன் டாலர் ஆகும். இது விண்கலம் தயாரிப்புக்கான தொகை மட்டுமே.

விண்வெளி நிலையத்தின் செயல்பாட்டு காலம் 2030-ல் முடிந்த பிறகு, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் விண்வெளி நிலையத்தை அகற்றும் பொறுப்பை இந்த விண்கலம் ஏற்கும். விண்வெளி நிலையத்தை வளிமண்டலத்திற்குள் கொண்டு வருவது மட்டுமல்லாமல், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஆபத்தை தவிர்ப்பதையும் இந்த விண்கலம் உறுதி செய்யும்.

டிஆர்பிட் விண்கலத்தின்மூலம், சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து அப்புறப்படுத்தப்படும். அதன் பின்னர் அந்த விண்கலமும், சர்வதேச விண்வெளி நிலைய பாகங்களும் வளிமண்டலத்தில் நுழையும்போது, அவை இரண்டும் உடைந்து எரியும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் 2030-ம் ஆண்டு வரைதான் என நாசா கூறினாலும், அதை கடந்தும் நிலையம் செயல்படக்கூடும் என்று சில நாசா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்