புதிய தலைவரை அறிவித்த ஹிஸ்புல்லா
|நஸ்ருல்லா கொல்லப்பட்ட நிலையில் ஹிஸ்புல்லா புதிய தலைவரை அறிவித்துள்ளது.
பெரூட்,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும், ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த அமைப்புகள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக, லெபனானுக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, கடந்த மாதம் 28ம் தேதி லெபனான் தலைநகர் பெரூட்டில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைவரான நஸ்ருல்லா கொல்லப்பட்டார். இது அந்த அமைப்பிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. தலைவர் இன்றி அந்த அமைப்பு செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். ஹிஸ்புல்லா புதிய தலைவராக நயிம் குவாசம் நியமிக்கப்பட்டுள்ளார். ஹிஸ்புல்லாவின் துணைத்தலைவராக இருந்த நயிம் குவாசம் அந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, நயிம் குவாசம் ஹிஸ்புல்லாவின் தலைவராக நீண்ட நாட்கள் நீடிக்கமாட்டார். இது தற்காலிக நியமனம்தான் என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி யோவா கெலண்ட் தெரிவித்துள்ளார்.