இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,000க்கும் மேற்பட்டோர் பலி - லெபனான் சுகாதார அமைச்சகம் தகவல்
|ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தில் உள்ளது.
காசா,
பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் போர் தொடங்கி நாளை மறுநாளுடன் (திங்கட்கிழமை) ஓர் ஆண்டாகிறது. ஈரானின் ஆதரவை பெற்ற ஹமாஸ் அமைப்புக்கு எதிரான இந்த போரில் காசாவில் சுமார் 42 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
இதனிடையே மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவை பெற்ற ஆயுத குழுக்கள் ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேலை குறிவைத்து வான்வழியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அவர்களுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடந்த மாதம் 23-ந் தேதி லெபனான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழி தாக்குதலை தொடங்கியது.
தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, ஈரானின் மூத்த ராணுவ தளபதி அப்பாஸ் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக இஸ்ரேலிய படைகள் லெபனானுக்குள் ஊடுருவி தரைவழி தாக்குதலையும் தொடங்கியது.
இதனிடையே கடந்த 1-ந் தேதி இரவு இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இஸ்ரேல், ஈரானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. அந்த வகையில் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தில் உள்ளது.
இந்தநிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் உட்பட 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் இதுவரை பெய்ரூட்டில் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.