மெக்சிகோ: படுகொலையான 2 குழந்தைகள் உள்பட 11 பேரின் உடல்கள் மீட்பு
|மெக்சிகோவில் 4.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர், போதை பொருள் கடத்தல் மற்றும் அது தொடர்புடைய கும்பல்களால் ஏற்பட்ட வன்முறையால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
சில்பான்சிங்கோ,
மெக்சிகோ நாட்டின் தெற்கே மெக்சிகோ நகரில் லாரி ஒன்றில் 2 குழந்தைகள் உள்பட 11 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அகாபுல்கோ நகருக்கு செல்லும் நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரியில் இந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் நேற்று தெரிவித்தனர். சில்பான்சிங்கோ நகரில் பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் மேயர் தலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள் இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளது. இந்நகரம், குர்ரீரோ என்ற தெற்கு மாகாணத்தின் தலைநகர் ஆகும். இந்நகரில் போதை பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் நடந்து, பலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இதே பகுதியில் 5 சிறுவர்கள் உள்பட 17 பேர் கடந்த வாரம் காணாமல் போனார்கள். எனினும், இந்த 2 சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையா? என்பது உடனடியாக தெரிய வரவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
முன்னாளில் இது பணக்காரர்கள் விளையாட கூடிய பீச் பகுதியாக இருந்தது. ஆனால், குற்ற வன்முறை சம்பவம் நடக்கும் பகுதியாக பின்னர் மாறி விட்டது. இதே அகாபுல்கோ புறநகரில், ஒரே குடும்பத்தின் 5 உறுப்பினர்களை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சுட்டு படுகொலை செய்த சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மெக்சிகோவில் 2006-ம் ஆண்டில் இருந்து இதுவரை 4.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர், போதை பொருள் கடத்தல் மற்றும் அது தொடர்புடைய கும்பல்களால் ஏற்பட்ட வன்முறையால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.