< Back
உலக செய்திகள்
நைஜீரியா பயணம் நிறைவு: ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

FILEPIC

உலக செய்திகள்

நைஜீரியா பயணம் நிறைவு: ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

தினத்தந்தி
|
18 Nov 2024 1:30 AM IST

பிரேசில் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 19-ம் தேதி கயானா செல்கிறார்.

அபுஜா,

நைஜீரியா அதிபர் போலா கமத் தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் மோடி நைஜீரியா சென்றார். விமானம் மூலம் நேற்று அபுஜா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த இந்தியா வம்சாவளியினரும் நைஜீரியா அதிகாரிகளும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நைஜீரியா நாட்டு பாரம்பரிய நடனத்துடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த மக்கள் மோடி...மோடி.. என்று கரகோஷம் எழுப்பினர். இந்திய பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு 17 ஆண்டுக்கு பிறகு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, நைஜீரியா இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து நைஜீரியாவில் உள்ள இந்தியா வம்சாவளியினரிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இதனிடையே பிரதமர் மோடிக்கு நைஜீரியா நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கமாண்டர் ஆப் தி நைஜர் விருது வழங்கப்பட்டது. மோடிக்கு நைஜீரிய மந்திரி ஐசோம் எசென்வோ விக் விருதை வழங்கினார். இது பிரதமர் மோடிக்கு ஒரு நாடு வழங்கும் 17-வது சர்வதேச விருது ஆகும். இந்த நைஜீரிய விருது 1969-ம் ஆண்டு ராணி எலிசபெத்துக்கு வழங்கப்பட்டது. அதன்பின் இவ்விருதை பெறும் 2-வது வெளிநாட்டு பிரமுகர் மோடி ஆவார்.

நைஜீரியா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி பிரேசிலில் இன்று நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார். அதன்பின்னர், பிரேசில் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாளை (19-ம் தேதி) கயானா செல்கிறார். கயானா அதிபர் இர்பான் அலியை சந்தித்து பேசுகிறார். இரு நாட்டு நட்புணர்வை ஆழப்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அங்குள்ள நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். 1968-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பிரதமர் கயானா செல்வது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்தநிலையில், மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தள பதிவில்,

பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியாவின் அபுஜாவில் ஒரு பயனுள்ள பயணத்தை முடித்துள்ளார். தனது 3 நாடுகளின் பயணத்தின் இரண்டாவது கட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிற்கு சென்றுள்ளார் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்