யு.பி.ஐ., பண பரிவர்த்தனை சேவை மாலத்தீவில் அறிமுகம்
|இந்தியாவின் பணப்பரிவர்த்தனை சேவையான யுபிஐ வசதியை மத்திய அரசு உதவியுடன் மாலத்தீவில் அந்நாட்டு அதிபர் முகம்மது முய்சு அறிமுகம் செய்துள்ளார்.
மாலே,
இந்தியாவில் பெட்டி கடை முதல் ஷாப்பிங் மால் வரை யுபிஐ மூலமே பெரும்பாலும் பணபரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. நகர்புறங்களில் மட்டும் இன்றி குக்கிராமங்களில் கூட தற்போது கூகுள் பே, போன் பே மூலமாக மக்கள் பரிவர்த்தனை செய்ய தொடங்கியுள்ளனர். இந்தியாவில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ள டிஜிட்டல் பரிவர்த்தனை சேவையை, வெளிநாடுகளிலும் அறிமுகம் செய்ய மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
அந்த வகையில் யு.பி.ஐ., தொடர்பாக இந்தியா - மாலத்தீவு இடையே கடந்த ஆகஸ்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து தற்போது அந்நாட்டில் யு.பி.ஐ.அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாலத்தீவு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாலத்தீவின் பொருளாதார வளர்ச்சியில் யு.பி.ஐ., குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கும். விரைவான பணப் பரிவர்த்தனை, வலுவான டிஜிட்டல் கட்டமைப்பு ஆகியவை இதன்மூலம் சாத்தியமாகும் என நம்புகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் யுபிஐ வசதி உள்ளது.