< Back
உலக செய்திகள்
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ:  ஹாலிவுட் பிரபலங்களின் பல கோடி மதிப்பிலான வீடுகள் எரிந்து சேதம்
உலக செய்திகள்

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: ஹாலிவுட் பிரபலங்களின் பல கோடி மதிப்பிலான வீடுகள் எரிந்து சேதம்

தினத்தந்தி
|
9 Jan 2025 10:26 AM IST

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பிரபல நடிகர்களான மார்க் ஹாமில், மாண்டி மூர் மற்றும் ஜேம்ஸ் உட்ஸ் உள்பட பலர் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வேறு இடங்களுக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளனர்.

காட்டுத்தீயால் புகை மண்டலம் பரவி காணப்படுகிறது. வெப்ப காற்றும் வீசி வருகிறது. இதனால், 30 ஆயிரம் கட்டிடங்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகும் என அஞ்சப்படுகிறது. இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், இந்த காட்டுத்தீக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரின் வீடுகளும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.

இதில், பாரீஸ் ஹில்டனின் மாலிபு பகுதியில் உள்ள வீடும் எரிந்து சேதமடைந்து உள்ளது. அதுபற்றிய வீடியோ ஒன்றை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீட்டில், விலை மதிப்பில்லா பல நினைவுகளை கட்டியெழுப்பினோம். வாழ்நாள் முழுமைக்கான நினைவுகளை கட்டும் கனவுகளுடன் உருவானது இந்த வீடு என சோக விசயங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த வீட்டில்தான் பீனிக்ஸ் முதன்முதலாக அவனுடைய காலடியை எடுத்து வைத்தான் என அவருடைய குழந்தை பற்றிய நினைவையும் குறிப்பிட்டு உள்ளார்.

இதேபோன்று, தி பிரின்சஸ் பிரைட் மற்றும் பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்ற கேரி எல்விஸ், வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், அவருடைய குடும்பத்தினர் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால், பாலிசேட்ஸ் கடற்கரை பகுதியில் அமைந்த அவருடைய வீடு தீயில் எரிந்து போனது என வேதனையை பகிர்ந்துள்ளார்.

ஆடம் பிராடி, லெய்டன் மீஸ்டர், பெர்கீ, அன்னா பாரிஸ், அந்தோணி ஹாப்கின்ஸ் மற்றும் ஜான் குட்மேன் உள்ளிட்டோரும் அவர்களுடைய வீடுகளை இழந்த வருத்தம் நிறைந்த செய்தியை தெரிவித்து உள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள லெய்டனின் ரூ.55.85 கோடி மதிப்பிலான வீடும் எரிந்து சேதமடைந்தது. அதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளியானது.

இதேபோன்று, பிரபல நடிகர்களான மார்க் ஹாமில், மாண்டி மூர் மற்றும் ஜேம்ஸ் உட்ஸ் உள்ளிட்டோரும் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

இந்த காட்டுத்தீயால் வீடுகள் பல எரிந்து விட்டன. சாலை வழிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. தீயை அணைக்க முடியாமல் கலிபோர்னியா தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

மேலும் செய்திகள்