< Back
உலக செய்திகள்
லெபனான் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்.. 100 பேர் பலி
உலக செய்திகள்

லெபனான் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்.. 100 பேர் பலி

தினத்தந்தி
|
23 Sept 2024 6:08 PM IST

அக்டோபர் மாதம் தொடங்கிய மோதலுக்குப் பிறகு லெபனானில் நடத்தப்படும் மிக உக்கிரமான தாக்குதல் இதுவாகும்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் விரிவடைந்து மும்முனை மோதலாக மாறியிருக்கிறது. ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளித்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் ஹமாஸ் மட்டுமின்றி இந்த இரண்டு அமைப்புகளுடனும் இஸ்ரேல் சண்டையிட்டு வருகிறது.

குறிப்பாக, லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக ராக்கெட் தாக்குதல் நடத்துவதும், இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுப்பதும் தொடர்கிறது. நேற்றும் தாக்குதல் நடத்தப்பட்டது. வடக்கு இஸ்ரேலின் உள்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவினர். இஸ்ரேல் தரப்பில் இருந்தும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் இன்று சரமாரியாக குண்டுமழை பொழிந்தது. சுமார் 300 இடங்களை குறிவைத்து வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதாகவும், 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கிய மோதலுக்குப் பிறகு லெபனானில் நடத்தப்படும் மிக உக்கிரமான தாக்குதல் இதுவாகும்.

இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீதான தாக்குதல்களுக்கு ராணுவ தளபதி ஹெர்சி ஹலேவி ஒப்புதல் அளித்திருப்பதாகவும், இன்று 300-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இலக்குகள் தாக்கப்பட்டதாகவும் அதில் கூறி உள்ளது.

வரும் நாட்களில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஹெர்சி ஹலேவி மற்றும் பிற இஸ்ரேல் தலைவர்கள் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்