< Back
உலக செய்திகள்
டிரம்ப் வெற்றிக்கு கமலா ஹாரிஸ், பைடன் வாழ்த்து; அமைதியான அதிகார பரிமாற்றத்திற்கு ஒப்புதல்
உலக செய்திகள்

டிரம்ப் வெற்றிக்கு கமலா ஹாரிஸ், பைடன் வாழ்த்து; அமைதியான அதிகார பரிமாற்றத்திற்கு ஒப்புதல்

தினத்தந்தி
|
7 Nov 2024 5:55 AM IST

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தொலைபேசி வழியே டிரம்பை தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டதுடன், வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைப்பும் விடுத்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதிக்கான தேர்தலில் 270-க்கும் கூடுதலான எலக்டோரல் வாக்குகளை பெற்று முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்துள்ளார்.

இந்நிலையில், தேர்தலுக்கு பின்பு முதன்முறையாக ஹோவர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய ஆதரவாளர்கள் முன் தோன்றி கமலா ஹாரிஸ் உரையாற்றினார். அப்போது அவர், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெற்ற தோல்வியை ஏற்று கொண்டார். அவருடைய பேச்சை கேட்க திரண்டிருந்த ஆதரவாளர்கள் பலரும் அப்போது அழுதபடி இருந்தனர்.

குடியரசு கட்சியை சேர்ந்த, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்பிடம் அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் மேற்கொள்ளப்படும் என அரசு நிர்வாகம் உறுதி செய்யும் என்று கூறினார். இதனால், 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது தோல்வியடைந்தபோது, வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற டிரம்ப் மறுப்பு தெரிவித்த விசயங்களை ஹாரிஸ் சுட்டி காட்டியிருக்கிறார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்காக, நம்முடைய நாட்டின் மீது கொண்ட முழுமையான அன்பு மற்றும் முழு உறுதி ஆகியவற்றால் என்னுடைய மனம் முழுவதும் நன்றியால் நிரம்பியிருக்கிறது என்றார்.

நாம் இருட்டுக்குள் நுழைகிறோம் என்பது போன்று பலர் உணருகின்றனர் என எனக்கு தெரியும். ஆனால், இருட்டாக இருக்கும்போதே, நாம் நட்சத்திரங்களை பார்க்க முடியும் என்று பழமொழி ஒன்றை நினைவு கூர்ந்து பேசினார்.

இதற்கு முன், டிரம்பை தொலைபேசி வழியே தொடர்பு கொண்ட ஜனாதிபதி ஜோ பைடன், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். வெள்ளை மாளிகைக்கு வரும்படி அவருக்கு அழைப்பும் விடுத்துள்ளார். நாட்டுக்கு இன்று உரையாற்றவும் பைடன் திட்டமிட்டு இருக்கிறார்.

மேலும் செய்திகள்