அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் குற்றவாளி- கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
|துப்பாக்கியை சட்ட விரோதமாக வாங்கிய வழக்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் குற்றவாளி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்கா அதிபராக இருக்கும் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன். இவர் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்குகளின் மீதான விசாரணை அந்நாட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய குற்றச்சாட்டுகளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள், மூன்றாவது வழக்கில் 5 ஆண்டுகள் என அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை ஹண்டர் பைடனுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
அதேநேரம் அவரது தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க சட்டப்படி குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு 120 நாட்களில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட வேண்டும். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்குள் தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், கோர்ட்டு அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். அதேநேரம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.