< Back
உலக செய்திகள்
வெள்ளை மாளிகை செல்கிறார் டிரம்ப்.. ஜோ பைடனுடன் 13-ம் தேதி சந்திப்பு
உலக செய்திகள்

வெள்ளை மாளிகை செல்கிறார் டிரம்ப்.. ஜோ பைடனுடன் 13-ம் தேதி சந்திப்பு

தினத்தந்தி
|
10 Nov 2024 9:02 AM IST

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி டொனால்டு டிரம்ப் பதவியேற்கிறார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

டிரம்ப் வெற்றியை தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ஜோ பைடன், அதிகார மாற்றத்தை சுமுகமாக நிறைவேற்றுவது குறித்து விவாதிக்க வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் டிரம்ப் வருகிற 13-ந்தேதி வெள்ளை மாளிகை செல்கிறார். அங்கு ஜனாதிபதியின் ஓவல் அலுவலகத்தில் இருவரும் சந்தித்து பேசுகின்றனர். இந்த தகவலை வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு ஜோ பைடனை சந்திப்பது இது முதல் முறையாகும்.

தேர்தலுக்குப் பிறகு, பதவியில் இருந்து விலகும் ஜனாதிபதி மற்றும் பதவிக்கு வரவிருக்கும் ஜனாதிபதிக்கு இடையேயான இத்தகைய சந்திப்பு அமெரிக்காவில் வழக்கமாக உள்ளது. இது அமெரிக்காவில் ஜனநாயகத்தின் கீழ் அமைதியான அதிகார பரிமாற்றத்தின் தொடக்கத்தைக் குறிக்கும். எனினும், கடந்த 2020ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்ததும், அவர் ஜோ பைடனுடன் வெள்ளை மாளிகையில் சந்திப்பை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி டொனால்டு டிரம்ப் பதவியேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்