< Back
உலக செய்திகள்
அமெரிக்க தேர்தல்: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் - ஜோ பைடன் ஆதரவு
உலக செய்திகள்

அமெரிக்க தேர்தல்: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் - ஜோ பைடன் ஆதரவு

தினத்தந்தி
|
21 July 2024 7:53 PM GMT

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் இன்று அறிவித்திருந்தார்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த சூழலில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19-ம் தேதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.

இந்த சூழலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கினார். 81 வயதாகும் நிலையில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடும் நிலையில், பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் பைடன் பேசுவதற்கு மிகவும் தடுமாறினார். அதேபோல் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை டிரம்ப் என்றும் தவறுதலாக கூறினார். இந்த சம்பவங்கள் ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அவர் அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார் என்றும் இதனால் அவர் போட்டியிட வேண்டாம் என்றும் ஜனநாயக கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர்.

இதனிடையே ஜனநாயக கட்சியின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூட ஜோ பைடன் விலக வேண்டும் என்று கூறி இருந்தார். மேலும் ஜோ பைடனின் குடும்பத்தினரும் அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும் என கூறியதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து தான் விலகுவதாக அதிபர் ஜோ பைடன் இன்று அறிவித்தார். இதனால், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் கமலா ஹாரிசை ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக நியமிக்க ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "எனது சக ஜனநாயகக் கட்சியினரே, எனது வேட்புமனுவை ஏற்க வேண்டாம். எஞ்சியிருக்கும் எனது பதவிக் காலம் முழுவதும் அதிபராக எனது கடமைகளில் எனது முழு ஆற்றலையும் செலுத்த முடிவு செய்துள்ளேன்.

2020ல் கட்சி வேட்பாளராக எனது முதல் முடிவு கமலா ஹாரிசை துணைத் தலைவராக தேர்ந்தெடுத்ததுதான். இது நான் எடுத்த சிறந்த முடிவு. இந்த ஆண்டு எங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் வருவதற்கு எனது முழு ஆதரவையும், ஒப்புதலையும் வழங்க விரும்புகிறேன். ஜனநாயகவாதிகள் - ஒன்று கூடி டிரம்பை தோற்கடிக்க வேண்டிய நேரம் இது. இதை செய்வோம்" என்று அதில் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்