அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவிப்பு
|எஞ்சியிருக்கும் பதவிக்காலத்தில் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவேன் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் டிரம்பின் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19-ம் தேதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். அதை டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.
ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கினார். 81 வயதாகும் நிலையில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நிலையில் பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் பைடன் பேசுவதற்கு மிகவும் தடுமாறினார்.
அதேபோல் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை டிரம்ப் என்றும் தவறுதலாக கூறினார். இந்த சம்பவங்கள் ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பைடன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க அதிபராக பணியாற்றுவது எனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும். மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கமாக இருந்தாலும், போட்டியில் இருந்து விலகி எஞ்சியிருக்கும் எனது பதவிக்காலத்தில் எனது கடமைகளை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துவது எனது கட்சிக்கும் நாட்டிற்கும் நல்லது என்று நான் நம்புகிறேன்.
எனது முடிவு குறித்து விரிவாக இந்த வார இறுதியில் நாட்டு மக்களிடம் பேசுவேன்" என்று தெரிவித்துள்ளார்.