ரஷியாவில் ஜெட் விமானம் தீப்பிடித்து விபத்து; விமானி உள்பட 3 பேர் பலி
|ஜெட் விமானம் தீப்பிடித்த சம்பவம் தொடர்பாக நாட்டின் உயர்மட்ட மாநில குற்றப்புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது.
மாஸ்கோ,
ரஷிய பயணிகள் ஜெட் விமானம் ஒன்று நேற்று தலைநகர் மாஸ்கோ பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் விமானி உள்பட 3 பேர் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுகோய் சூப்பர்ஜெட் 100 ரகத்தை சேர்ந்த இந்த விமானம், ரஷிய தலைநகருக்கு தென்கிழக்கே லுகோவிட்சியில் உள்ள விமானம் தயாரிக்கும் ஆலையில் இருந்து பயணிகள் இல்லாமல் நேற்று ஊழியர்களின் பயிற்சிக்காக புறப்பட்டது.
இந்த நிலையில், மாஸ்கோவின் வினுகோவா விமான நிலையத்தை நோக்கி சென்ற போது, விமானத்தில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக நாட்டின் உயர்மட்ட மாநில குற்றப் புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மாஸ்கோ விமான நிலையம் ஒன்றில் இதே வகை சுகோய் சூப்பர்ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 41 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.