'இது பெண்கள் மீதான போர்..' டிரம்ப் வெற்றி குறித்து அதிருப்தி தெரிவித்த ஹாலிவுட் பிரபலங்கள்
|டிரம்ப் வெற்றி பெற்றது குறித்து ஹாலிவுட் பிரபலங்கள் பலர் தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வாஷிங்டன்,
உலக நாடுகளில் மிகவும் சக்திவாய்ந்த பதவியாக கருதப்படும் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்தது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிட்டார்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் 270-க்கும் கூடுதலான எலக்டோரல் வாக்குகளைப் பெற்று டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்க உள்ளார். அவருக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம், தேர்தல் பிரசாரத்தின்போது ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலர் தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர். தற்போது தேர்தலில் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில், அவரை ஆதரித்த பிரபலங்கள் பலர், டிரம்ப் வெற்றி பெற்றது குறித்து தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்கார் விருது வென்ற அமெரிக்க பாடகி பில்லி ஐலிஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இது பெண்கள் மீதான போர்" என்று பதிவிட்டுள்ளார். இவர் கமலா ஹாரிசுக்கு தனது வெளிப்படையான ஆதரவை தெரிவித்து வந்தார். கடந்த வாரம் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியின்போது, தனது ரசிகர்களிடம் "கமலா ஹாரிசுக்கு வாக்கு செலுத்துங்கள்" என்று பில்லி ஐலிஷ் கேட்டுக் கொண்டார்.
இதே போல் கமலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த மற்றொரு ஹாலிவுட் பிரபலமான மூத்த நடிகை ஜேம் லீ கர்டிஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. பலர் தங்கள் வெற்றியை கொண்டாடிக்கொண்டு இருப்பார்கள். பலர் திகைத்துப் போய் சோகமாக இருப்பார்கள். அமெரிக்காவும், ஜனநாயகமும் எப்போதும் இப்படித்தான் இருக்கும்.
ஆனால் இந்த தேர்தல் முடிவின் அர்த்தம் என்ன? கொடூரமான, கட்டுப்பாடு மிகுந்த காலம் திரும்பி வருகிறது. தங்கள் உரிமைகள் மறுக்கப்படும் என்று சிறுபான்மையினரும், பெண்களும், ஓரினச் சேர்க்கையாளர்களும் அஞ்சுகின்றனர். நாம் தொடர்ந்து போராடுவோம். அதுதான் அமெரிக்கர்களின் அடையாளம். உண்மையான அமெரிக்கராக இருங்கள்" என்று பதிவிட்டுள்ள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகியும், கமலா ஹாரிசின் தீவிர ஆதரவாளருமான கார்டி பி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் உங்கள் அனைவரையும் வெறுக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். கமலா ஹாரிசை எதிர்த்து போட்டியிட்ட டொனால்டு டிரம்பை பாடகி கார்டி பி தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார்.
அதே போல், பிரபல ஹாலிவுட் நடிகை கிறிஸ்டினா ஆப்பில்கேட் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நீங்கள் பெண் உரிமைகளுக்கு எதிராக வாக்களித்திருந்தால் என்னை பின்தொடர வேண்டாம். ஏனென்றால் நீங்கள் செய்தது உண்மைக்கு மாறானது. இப்படிப்பட்ட ரசிகர்கள் எனக்கு தேவையில்லை" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.