இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - காசாவில் 25 பேர் பலி
|காசாமுனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர்.
காசா சிட்டி,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், காசா முனையில் இன்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். மத்திய காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாக காசா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.