< Back
உலக செய்திகள்
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 24 பேர் பலி
உலக செய்திகள்

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 24 பேர் பலி

தினத்தந்தி
|
11 Nov 2024 5:28 AM IST

லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இஸ்ரேல் நேற்று மதியம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.

பெய்ரூட்,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் மோதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.

அடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி தாக்குதல் நடத்தி கொன்றது. தொடர்ந்து, ஹிஸ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி மற்றும் அவர்களுடைய செயற்குழுவின் உறுப்பினரான நபில் குவாவக் என்பவரை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்தது. தொடர்ந்து லெபனான் மீது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில், லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இஸ்ரேல் நேற்று மதியம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், பால்பெக் மற்றும் பெகா பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலர் பலியானார்கள். பெய்ரூட் நகரின் வடக்கே பெயில் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆல்மேட் நகரம் மீதும் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.

2023-ம் ஆண்டு அக்டோபரில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையேயான தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை விவரங்களை லெபனானின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதுபற்றிய செய்தியில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 3,189 ஆகவும், காயமடைந்தோர் எண்ணிக்கை 14,078 ஆகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்