< Back
உலக செய்திகள்
காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 21 பேர் பலி
உலக செய்திகள்

காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 21 பேர் பலி

தினத்தந்தி
|
5 Jan 2025 7:00 AM IST

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.

காசா முனை,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை காசா முனைக்கு பணய கைதிகளாக ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டது.

அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.

அதேவேளை, ஓராண்டை கடந்தும் இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் நீடித்து வருகிறது. இந்த போரில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்தவும், பணய கைதிகளை மீட்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கத்தாரில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், காசா முனையில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. காசாவின் கான் யூனிஸ், காசா சிட்டி, டிர் அல் பலாக் உள்பட பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

மேலும் செய்திகள்