இஸ்ரேல் விரும்பினால்... போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தயார்: ஹிஸ்புல்லா புதிய தலைவர்
|லெபனானின் கிழக்கே உள்ள பால்பெக் நகரில் நடந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார் என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
பெய்ரூட்,
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் 27-ந்தேதி தாக்குதல் நடத்தி கொன்றது. இதன்பின் அந்த அமைப்பின் புதிய தலைவராக நயீம் காசிம் பதவியேற்றார்.
இந்நிலையில், சில நிபந்தனைகளுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தயாராக இருக்கிறோம் என நயீம் காசிம் கூறியுள்ளார். நஸ்ரல்லா மரணத்திற்கு பின்னர், புதிய தலைவராக காசிம் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக அவர் பேசும்போது, லெபனானில் இஸ்ரேல் படையினரின் வான் மற்றும் தரைவழி தாக்குதல்களை பல மாதங்களுக்கு தொடர்ந்து தடுத்து நிறுத்துவதற்கு ஹிஸ்புல்லாவால் முடியும் என்று கூறினார்.
இந்நிலையில் காசிம் நேற்று கூறும்போது, இந்த போரை நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறோம் என இஸ்ரேல் முடிவு மேற்கொண்டால், நாங்கள் அதனை ஏற்று கொள்கிறோம். ஆனால், முறையானது மற்றும் சரியானது என நாங்கள் பார்க்க கூடிய சில நிபந்தனைகளுக்கு உட்பட்டே அது இருக்கும் என கூறியுள்ளார்.
எனினும், இதுபற்றி இஸ்ரேலிடம் இருந்து நம்பத்தக்க எந்தவித முன்மொழிவுகளும் எங்களுக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார். இதேபோன்று இஸ்ரேலின் ஆற்றல் துறை மந்திரி எலி கோஹன் கூறும்போது, பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் கூடி ஆலோசனை நடந்து வருகிறது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு சிறிது காலம் ஆகலாம் என்று அந்நாட்டு வானொலியில் பேசும்போது குறிப்பிட்டார்.
இதனால், 60 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கான விசயங்கள் பற்றி அமைச்சர்வையில் ஆலோசிக்கப்பட்டன என கூறப்படுகிறது. அதற்கேற்ப பிரதமர் நெதன்யாகு மந்திரிகளை நேற்று சந்தித்து பேசியுள்ளார்.
எனினும், லெபனானின் கிழக்கே உள்ள பால்பெக் நகரில் நடந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார் என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. ஒருபுறம் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் தயாரானபோதும், மறுபுறம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.