இஸ்ரேலில் ஜனாதிபதி டிரம்ப் என்ற பெயரில் ஒயின் அறிமுகம்
|இஸ்ரேல் மீது அன்பு செலுத்த கூடிய ஜனாதிபதி டிரம்பின் வெற்றியை கொண்டாடுவது சரியாக இருக்கும் என இஸ்ரேலில் உள்ள ஒயின் நிறுவன உரிமையாளர் கூறியுள்ளார்.
ஜெருசலேம்,
இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் மலை பகுதிகளில் சாகட் ஒயினரீஸ் என்ற பெயரில் ஒயின் உற்பத்தி நிறுவனம் உள்ளது. இந்த நிலையில், புதிய சிவப்பு ஒயின் ஒன்றை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதற்கு, ஜனாதிபதி டிரம்ப் என பெயரிடப்பட்டு உள்ளது.
டிரம்ப் ஒயின் அறிமுக நிகழ்ச்சியில், பின்யமின் மண்டல கவுன்சில் தலைவர் யிஸ்ரேல் கான்ஸ் கலந்து கொண்டார். டிரம்ப் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியான நிலையில், அதற்கான கொண்டாட்டம் நடந்தது. இதிலும் கான்ஸ் கலந்து கொண்டார். டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்து கான்ஸ் வெளியிட்ட செய்தியில், இறையாண்மைக்கான நேரமிது. ஒரு வலிமையான டிரம்ப், ஒரு யூத மாகாணம் என குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, இஸ்ரேல், ஜூடியா மற்றும் சமரியா மீது அன்பு செலுத்தும் ஒரு ஜனாதிபதியை நாம் பெற்று, ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம். நிலைத்தன்மை மற்றும் உண்மையான அமைதி ஆகியவற்றிற்கான ஒரு கொள்கைக்காக இந்த ஒட்டுமொத்த பகுதியும் காத்திருக்கிறது என்றார்.
இதேபோன்று, சாகட் ஒயினரியின் உரிமையாளர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியான யாகோவ் பெர்க் கூறும்போது, எதிரிகளை தொடர்ந்து எதிர்த்து இஸ்ரேல் போரிட்டு வரும் சிக்கலான இந்த நாட்களில், ஒரு உண்மையான நண்பர் மற்றும் இஸ்ரேல் மீது அன்பு செலுத்த கூடிய ஜனாதிபதி டிரம்பின் வெற்றியை கொண்டாடுவது சரியாக இருக்கும் என நினைத்தோம்.
அவருடைய இந்த வெற்றியானது, எதிரிகளை நாம் முழுமையாக வெற்றி கொள்ளும் வகையில் முன்னேற்றம் கண்டு, நம்முடைய மகன்களும், மகள்களும் சொந்த நாட்டுக்கு விரைவாக திரும்புவார்கள் என நாம் அனைவரும் வேண்டி கொள்வோம் என கூறியுள்ளார்.